ஓம் ஸ்ரீ சக்திவேல் பரமானந்த குரு சுவாமிகள்







ஓம் ஸ்ரீ சக்திவேல் பரமானந்த குரு சுவாமிகள்,தென்னாற்காடு
மாவட்டத்திலுள்ள கடலூரில் 175 ஆண்டுகளுக்கு முன் அந்தண
மரபில் தோன்றினார்.

அந்தண மரபுப்படி வேத பாராயணங்கள்,உபநிஷத்துக்கள்
அனைத்தும் கற்பிக்கப்பட்டன.சாஸ்திரங்களின் வலிமையை உணர
உணர மந்திர சக்தியின் அற்புதம் அவருக்குத் தென்பட்டன.
தேவியை பூஜிக்க இயந்திரங்களை பயன்படுத்தினார்.
அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் தன்னுள்
இருப்பதை அறிந்துணர்ந்தார்.

இளம் வயதில் தந்தையை இழந்தார்.சகோதரர்களிடையே சொத்து
தகராறு தோன்றியது. நம்மை அழிக்கும் சக்திக்கு பங்கு போட்டுக்
கொள்ள சண்டையிடும் துன்மர் கூட்டத்தினிடையே நாமிருப்பது
வீண் என்று வீட்டை விட்டு புறப்பட்டார்.

ஆத்ம ஞானமே நமக்குத் தேவை. ஆத்ம தரிசனமே தாம் காண
வேண்டிய காட்சி என்று கங்கை, காசி,ஹரித்துவார்,பண்டரிபுரம்,
காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கெல்லாம் சுற்றிச் திரிந்தார்.
இதன் விளைவாக மன உளைச்சல் நின்றது.
கடைசியாக புதுவை வந்து சேர்ந்தார்.

எங்கும் இறைவன் மயம் என்ற உணர்ச்சி அவருள் பொங்கி வழிந்தது.

அனைத்திலும் இறைவனைக் கண்டார். அதனால் தரையில் கால்
வைத்து நடக்கவும் கூசினார்.மக்கள் பேசுவதைப் பார்த்து இறைவன்
அவர்கள் உருவில் பேசுகிறார் என்பார். நாய் குரைப்பதைப் பார்த்து
இறைவன் அந்த உருவத்தில் பேசுகிறார் என்பார்.

கதிரவனின் பிரகாசத்தைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடுவார்.

கடலின் அழகையும் ,ஆழத்தையும் பார்த்து “இறைவா-உன்னை உணர
முடிகிறதே “ என்பார். நெருப்பில் கையை விட்டு “இறைவா- உன்னை
தொட முடிகிறதே” என்பார்.

” இறைவா- நீ எங்குமிருக்கிறாய்-உன்னை நான் எங்கும் பார்க்கிறேன்,
உன்னிடம் பேசுகிறேன் -விளையாடுகிறேன். இதைவிட எனக்கு என்ன
வேண்டும்-இப்படியே இருந்தால் போதும்” என்று ஆனந்தக்கண்ணீர்
விடுவார். கண்ணீர் தாரை தாரையாக வழியும்.சதா சர்வ காலமும்
அவர் கண்ணீர் விட்டுக் கொண்டேயிருப்பார்.

இறைவன் மேல் ஒரே அன்பு மயமாக ஆனந்த மயமாக இருப்பார்.

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருகி இராப்பகல் ஏத்துவன்
என் பொன் மணியை இறைவனை ஈசனை
தினபன் கடிப்பன் திருத்துவன் தானே
-- திருமூலர்


சுவாமிகள் ஏகாந்தத்தில் நிலைத்த உடன் சத்துவ குணத்திலிருந்து
நிர்குணத்திற்கு வந்தார்.இத்தருணத்தில் ஓம் ஸ்ரீ ஞானானந்த
சுவாமிகளின் சந்திப்பு ஏற்பட்டது.இமயமலையில் இருவரும்
ஆத்ம சாதனை பயிலும் போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
பிறகு சுவாமிகள் புதுவைக்கு வந்து தங்கியிருக்கும் பொழுது,
ஞானானந்த சுவாமிகளின் சந்திப்பு மீண்டும் ஏற்பட்டது.

சுவாமிகள் ஆனந்தமயமாக காட்சியளித்தார். அவரின்
லட்சுமிகடாட்சமான முகத்தை கண்டு-மக்கள் அவரின் சக்தியை
உணர்ந்தார்கள். சுவாமிகளிடம் ஆசி பெற்றவர்களின் நோய் குணமாகியது.அப்பகுதி மக்களின் துன்பம்
சிறுக சிறுக மறைந்தது.யாராவது தங்கள் கஷ்டத்தை சுவாமிகளிடம்
சொன்னால்-இதோ இறைவன் இருக்கிறானே,கஷ்டமெங்கே,
ஆனந்தமாக இருக்கிறான்" சந்தோஷமாக போ” என்பார்.
வந்தவரின் கஷ்டம் அக்கணமே மறைந்து விடும்.

சுவாமிகளை தரிசனம் செய்தால் அன்று பூராவும் சந்தோஷமாக
இருக்கும் என்பதை மக்கள் கண்டுணர்ந்தார்கள். நம்பிக்கையும்
ஏற்பட்டது. அவரின் பேரன்பு பிரபஞ்ச முழுவதும் பரவத்
தொடங்கியது. ஒரு நாள் மாலை அப்படியே உட்கார்ந்திருந்தார்.
எதையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.ஒரு திக்கையே நோக்கி
தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்திலிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அருகிலிருந்தவர்கள் ஆச்சரியத்தோடு வினவினார்கள்.
”அங்கே ஆண்டவன் சிரிக்கப் போறான்டா -
ஆயிரமாயிரம் பேர் வாழப் போறாண்டா “ என்று துள்ளிக்
குதித்தோடினார். தன் வேட்டியை எடுத்துக் காட்டி,
“துணி வரப் போகுதடா-துணி வரப் போகுது”
என்று சிரித்தார்.சற்று நேரம் கழித்து மீண்டும் “எல்லோரும் ஏறிப் போக
பெரிய வண்டி வரப்போகுது- எப்போதும் ஓடும் “ என்று சிரித்துக்
கொண்டிருந்தார்.

சில காலம் அமைதியாக இருந்தார்.இரவிலும் பகலிலும் தூங்குவது
இல்லை.ஒரு நாள் விடியற்காலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு
தரிசிக்க வருவோரையெல்லாம் “ நாளைக்கு வாங்கோ- நாளைக்கு
வாங்கோ”என்றார். ஒவ்வொருவரையும் பார்த்து கரம் கும்பிட்டு
சொன்னார். இதைப் பாத்தவர்களுக்கு உடல் சிலிர்த்தது.
சுவாமிகள் ஏதோ முக்கியமான செய்தி சொல்லப் போகிறார்
என்று நினைத்தனர்.

சுவாமிகள் சொற்படியே மறுநாள் சுவாமிகளைப் பார்க்க வந்தார்கள்.

ஓம் ஸ்ரீ பரமானந்த சத்குரு சுவாமிகள் பரமானந்தத்தில் திளைத்து
சமாதியில் மூழ்கி விட்டார்.

செய்தி காட்டுத்தீ போல பரவியது.ஆத்ம சாதகர்கள், பக்தர்கள்,
ஞானிகள் என அனைவரும் கூடி விட்டனர்.புதுவை முதலியார்பேட்டை,காராமணிக்குப்பத்தில்
சுவாமிகளின் அருளுடலை அடக்கம் செய்தனர்.சுவாமிகள் வழிபாடு
செய்த லிங்கம் சமாதியின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுவாமிகள் பூஜித்த இயந்திரமும் அங்கேயே உள்ளது.

சுவாமிகள் குறிப்பிட்ட படியே அந்த இடத்தில் “நெசவாலை” ஒன்றும்
ரயில் தண்டவாளமும் பிற்காலத்தில் உருவானது.




சுவாமிகள் வாழ்ந்த காலத்தைச் சரியாக கணக்கிடுவதற்குப் போதிய
சான்றுகள் இல்லை.இருப்பினும் கி.பி. 1830 லிருந்து கி.பி.1860 வரை
அல்லதுகி.பி. 1870 லிருந்து கி.பி.1890 வரை இருக்கலாம் என்று
செவிவழிச் செய்திகள் செப்புகின்றன.

ஆன்மீகச்சிந்தனையில் அடியேன் 
GanesanPondicherry


No comments:

Post a Comment